ஜம்மு: காஷ்மீர் பண்டிட்கள் மீண்டும் தங்களது வாழ்விடங்களுக்கு திரும்பி புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி நேற்று துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பிறகு மெகபூபா முப்தி கூறியதாவது: காஷ்மீர் பண்டிட்கள் அவர்கள் வசித்த பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு திரும்பி வந்து மறுவாழ்வு பெறுவது குறித்த விவகாரத்தில் அதிக கவனத்தை செலுத்த கோரி துணை நிலை ஆளுநரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது தார்மீக கட்டாயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வும்கூட. காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் மீண்டும் அவர்களது வாழ்விடங்களுக்கு திரும்பாமல் எந்தவொரு அரசியல் நடவடிக்கையும் முழுமை அடையாது.
தாயகத்திலிருந்து துயரகரமாக இடம்பெயர்ந்த நமது பண்டிட் சகோதர சகோதரிகள் கண்ணியமான, பாதுகாப்பான மற்றும் நிலையான முறையில் திரும்பி வருவதற்கான வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்வது ஒரு தார்மீக கட்டாயம். அவர்கள் திரும்பி வருவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல அது ஒரு சமூகப் பொறுப்பு.
அதற்கான முயற்சிகளை விவரிக்கும் அறிக்கையை துணை நிலை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளேன். அதனை நேர்மறையாக பாராட்டிய அவர் இந்த விவகாரத்தில் தன்னால் முடிந்ததை செயல்படுத்துவதாக உறுதி அளித்தார். இவ்வாறு முப்தி கூறினார்.
துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பதவியேற்று ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மெஹபூபா முப்தி தற்போதுதான் முதல் முறையாக அவரை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.