புதுடெல்லி: பட்டாசுக்கு டெல்லியில் விதிக்கப்பட்டதடையை ஏன் நாடு முழுவதும் நீட்டிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
‘பேரியம் நைட்ரேட் போன்ற வேதிப் பொருட்களை பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால் உடல்நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுகிறது. எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும்’ என்று கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதற்கிடையே, பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால் தாக்கல் செய்த மற்றொரு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் டெல்லியில் 2024-ம் ஆண்டு தடை விதித்தது. பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த தடையை நீக்க கோரி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நடந்த வாதம்:
தலைமை நீதிபதி: பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாடு முழுவதும் இருக்க வேண்டும். வசதி படைத்தவர்கள் வாழும் டெல்லிக்கு மட்டுமானதாக இருக்ககூடாது. டெல்லி போல, சுத்தமான காற்றை சுவாசிக்க நாட்டின் பிற பகுதி மக்களுக்கு உரிமை இல்லையா?
உச்ச நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அபராஜிதா சிங்: குளிர்காலங்களில் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதால், அவசரகால நடவடிக்கையாக கட்டுமான செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதற்கான இழப்பீடு தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு வாதம் நடந்தது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்: கட்டுமான செயல்பாடுகளுக்கு தடை விதிக்கும்போது, கட்டுமான தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். இறுதியில் ஏழைத் தொழிலாளர்கள் கஷ்டப்படுகிறார்கள். பட்டாசு விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் டெல்லியில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரும் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். பசுமை பட்டாசு தயாரிப்பு குறித்த நிலை அறிக்கையையும் தாக்கல் செய்யவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.