ஆதம்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில், வீரர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார்.
பஞ்சாபின் ஆதம்பூரில் இந்திய விமான படைத்தளம் உள்ளது. இங்கு எஸ் 400 ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இது மிக் 29 ரக போர் விமானங்களின் படைத்தளம் ஆகும். இந்தியா, பாகிஸ்தான் போரின்போது ஆதம்பூர் விமான படைத் தளம் மீது அதிதீவிர தாக்குதல்களை நடத்தினோம். எஸ் 400 ஏவுகணைகளை தகர்த்தோம், மிக் 29 ரக போர் விமானங்களை அழித்தோம் என்று பாகிஸ்தான் ராணுவம் வதந்திகளை பரப்பியது.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆதம்பூர் விமான நிலையத்துக்கு சென்று வீரர்களுடன் கலந்துரையாடினார். எஸ் 400 ஏவுகணைகள் மற்றும் மிக் 29 போர் விமானங்கள் பின்னணியில் தெளிவாக தெரிய, வீரர்கள் மத்தியில் அவர் பேசினார். அவர் கூறியதாவது:
வீர, தீரமிக்க இந்திய வீரர்களை பார்க்கும்போது என் உள்ளம் பூரிக்கிறது. நீங்கள் வரலாற்று சாதனை படைத்து உள்ளீர்கள். ஒட்டுமொத்த நாட்டையும் பெருமிதம் அடைய செய்துள்ளீர்கள். எதிர்கால தலைமுறையினருக்கு புதிய உத்வேகம் அளித்து உள்ளீர்கள். இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு முன்பாக நான் தலைவணங்குகிறேன்.
உங்களது வீரத்தால் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற வார்த்தை உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் உங்களோடு இருக்கிறார்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நாங்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.
இந்தியா என்பது புத்தருடைய பூமி மட்டுமல்ல, குரு கோவிந்த் சிங்கின் பூமியும்கூட. ஒரு லட்சம் பேர் எதிர்த்து வந்தாலும் அவர்களை எதிர்த்து போரிடுவேன் என்று குரு கோவிந்த் சிங் கூறினார். அவரது வீரம், நமது ரத்தத்தில் கலந்திருக்கிறது.
திறன்வாய்ந்த ராணுவத்தால் மட்டுமே துல்லிய தாக்குல்களை நடத்த முடியும். இந்திய விமானப்படை பாகிஸ்தான் உள்பகுதிகளில் செயல் பட்ட தீவிரவாத முகாம்களை 20 நிமிடங்களில் அழித்து துவம்சம் செய்தது. விமானப்படையின் வேகமும் அதிதீவிர தாக்குதலும் எதிரிகளை நிலைகுலைய செய்திருக்கிறது. அவர்களின் இதயத்தையே துளைத்திருக்கிறது.
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை இணைந்து பாகிஸ்தான் ராணுவத்தை முழுமையாக தோற்கடித்து உள்ளன.
தாக்குதலின்போது ஏராளமான பயணிகள் விமானங்கள் வானில் பறந்தன. எனினும் எந்தவொரு பயணிகள் விமானத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீவிரவாத முகாம்கள், பாகிஸ்தான் விமானப்படை தளங்களை மட்டும் இந்திய விமானப் படை துல்லியமாக தாக்கி அழித்தது.
தீவிரவாதத்தை தடுக்க லட்சுமணன் கோட்டை நாம் வரையறுத்து இருக்கிறோம். அந்த கோட்டை யார் தாண்டிலும் தண்டிக்கப்படுவார்கள். போரின்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள் நமது வலிமையை உலகத்துக்கு உணர்த்தியது. எஸ்400 ஏவுகணைகள் போன்ற இந்தியாவின் அதிநவீன ஏவுகணைகள் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகின்றன.
பாகிஸ்தான் ராணுவம் எவ்வளவோ முயன்றும் சிறிதளவுகூட முன்னேற முடியவில்லை. இந்திய விமான படைத் தளங்களுக்கு மிகச் சிறிய பாதிப்புகூட ஏற்படவில்லை. உலகத்திலேயே மிகச் சிறந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இந்தியாவிடம் உள்ளன. இப்போது பாகிஸ்தா னின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாகவே ராணுவ நடவடிக்கையை நிறுத்தி உள்ளோம். அந்த நாடு மீண்டும் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.
நாங்கள் அமைதியை மட்டுமே விரும்புகிறோம். ஆனால் எங்களை சீண்டினால் அழித்து துவம்சம் செய்துவிடுவோம். பாகிஸ்தானின் எந்த மூலையில் தீவிரவாதிகள் ஒளிந்திருந்தாலும் எங்களிடம் இருந்து தப்ப முடியாது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.