சண்டிகர்: பஞ்சாப் அமைச்சரவையிலிருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ அன்மோல் ககன் மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2022-ல் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் கரார் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அன்மோல் ககன் மான்.
பாடகியான இவர், பகவந்த் மான் தலைமையிலான அரசில் சுற்றுலா, முதலீட்டு மேம்பாடு துறை அமைச்சராக பதவி வகித்தார். எனினும் கடந்த ஆண்டு அமைச்சரவையிலிருந்து அன்மோல் நீக்கப்பட்டார். இந்நிலையில் அரசியலில் இருந்தே விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அன்மோல் வெளியிட்ட பதிவில், “என் இதயம் கனமாக இருக்கிறது, ஆனால் நான் அரசியலை விட்டு விலக முடிவு செய்துள்ளேன். எம்எல்ஏ பதவியிலிருந்து விலகும் என்னுடைய முடிவை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். கட்சிக்கு வாழ்த்துகள். பஞ்சாப் அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார். ஆனால், அவரது விலகலை ஆம் ஆத்மி கட்சி ஏற்க மறுத்துள்ளது.