சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் வெள்ள நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால், கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 7-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் கூறுகையில், “ மாநிலத்தின் வெள்ள நிலைமையை கருத்தில் கொண்டு முதல்வர் பகவந்த் சிங் மான் அறிவுறுத்தலின்படி பஞ்சாப் முழுவதும் உள்ள அனைத்து அரசு உதவி பெறும், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள் செப்டம்பர் 7 வரை மூடப்படுகிறது. உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ என்றார்.
பஞ்சாப் முழுவதும் இயற்கையின் சீற்றத்துக்கு ஆளாகியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 3.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பஞ்சாப் அரசு முன்னதாக, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செப்டம்பர் 3 வரை விடுமுறை அறிவித்திருந்தது. தற்போது வெள்ள நிலைமை மேலும் மோசமாகியுள்ளதையடுத்து இந்த விடுமுறை மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்பைத் தொடர்ந்து மிக குறுகிய காலத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டதையடுத்து சட்லஜ், பியாஸ் மற்றும் ராவி ஆறுகள் மற்றும் பருவகால ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் பஞ்சாப் மாநிலம் மிக மோசமான வெள்ள நிலைமையை எதிர்கொண்டுள்ளது. மேலும், அம்மாநிலத்தில் பெய்து வரும் கனமழையும் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது.