புதுடெல்லி: சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் கைலாஷ் மானசரோவர் அமைந்துள்ளது. இதனால் அங்கு செல்வதற்கு சீன அரசின் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம். இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே மோதல் ஏற்பட்டதால் கைலாஷ் மானசரோவர் யாத்திரை நிறுத்தப்பட்டது. 5 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இந்த யாத்திரை தொடங்கியது.
மானசரோவருக்கு லிபுலேக் கணவாய் (உத்தராகண்ட்), நாது லா கணவாய் (சிக்கிம்), காத்மாண்டு (நேபாளம்) ஆகிய 3 வழிகளில் செல்ல முடியும். இந்நிலையில், சுமார் 750 பக்தர்கள் அரசு முகமைகள் மூலம் கைலாஷ் யாத்திரை புறப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் காத்மாண்டு வழியாக சென்றனர்.
இந்த சூழலில் நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வன்முறையாக மாறி போர்க்களமாக மாறி உள்ளது. போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால், மானசரோவர் சென்ற பக்தர்கள் நாடு திரும்ப முடியாமல் திபெத்தில் தவிக்கின்றனர். இவர்கள் தாங்கள் தாயகம் திரும்ப உதவ வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.