புதுடெல்லி: நேபாள பிரதமர் சுசீலா கார்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவரது முயற்சிக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
நேபாள பிரதமர் சுசீலா கார்கி உடன் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் சுசீலா கார்கி உடன் ஒரு அன்பான உரையாடல் நிகழ்த்தினேன். சமீபத்திய துயரகரமான உயிர் இழப்புகளுக்கு மனமார்ந்த இரங்கலை தெரிவித்தேன். மேலும், நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவரது (பிரதமர் சுசீலா கார்கி) முயற்சிகளுக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கும் என்பதை தெரிவித்தேன்.
மேலும், நாளை நேபாளத்தின் தேசிய தினம் என்பதால் அதை முன்னிட்டு அவருக்கும் நேபாள மக்களுக்கும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து கடந்த 13-ம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர் மோடி, “நேபாளம் இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடு. அதன் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுசீலா கார்கிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நேபாளத்தில் அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு ஏற்பட சசீலா வழிவகுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவர் நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றுள்ளார். பெண்களுக்கு அதிகாரமளித்தலில் இது ஒரு நல்ல உதாரணம். நிலையற்ற ஒரு சூழலுக்கு மத்தியிலும் ஜனநாயக விழுமியங்களை உச்சத்தில் வைத்திருக்கும் நேபாள மக்கள் ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன்.
கடந்த சில நாட்களாக, நேபாள இளைஞர்கள் நேபாளத்தின் சாலைகளை சுத்தம் செய்து வண்ணம் தீட்ட கடுமையாக உழைத்து வருகின்றனர். அது தொடர்பான படங்களை சமூக ஊடகங்களில் பார்த்தேன். இது ஒரு நேர்மறையான பணி. அவர்களின் நேர்மறையான சிந்தனையும் நேர்மறையான பணியும் ஊக்கமளிப்பது மட்டுமல்ல, நேபாளத்தின் புதிய எழுச்சியின் தெளிவான அறிகுறி. நேபாளத்தின் பிரகாசமான எதிர்காலத்துக்கு நல்வாழ்த்துகள்.” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.