இம்பால்: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுசீலா கார்கி, நாட்டின் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்புக்கு வழி வகுப்பார் என நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேபாள இளைஞர்கள் சாலைகளை சுத்தம் செய்து வண்ணம் தீட்டும் பணிகளில் ஈடுபட்டதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, நேபாளத்தின் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுசீலா கார்கிக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார். அவர் பேசும்போது, “நேபாளம் இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடு. அதன் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுசீலா கார்கிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நேபாளத்தில் அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு ஏற்பட சசீலா வழிவகுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவர் நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றுள்ளார். பெண்களுக்கு அதிகாரமளித்தலில் இது ஒரு நல்ல உதாரணம். நிலையற்ற ஒரு சூழலுக்கு மத்தியிலும் ஜனநாயக விழுமியங்களை உச்சத்தில் வைத்திருக்கும் நேபாள மக்கள் ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன்.
கடந்த சில நாட்களாக, நேபாள இளைஞர்கள் நேபாளத்தின் சாலைகளை சுத்தம் செய்து வண்ணம் தீட்ட கடுமையாக உழைத்து வருகின்றனர். அது தொடர்பான படங்களை சமூக ஊடகங்களில் பார்த்தேன். இது ஒரு நேர்மறையான பணி. அவர்களின் நேர்மறையான சிந்தனையும் நேர்மறையான பணியும் ஊக்கமளிப்பது மட்டுமல்ல, நேபாளத்தின் புதிய எழுச்சியின் தெளிவான அறிகுறி. நேபாளத்தின் பிரகாசமான எதிர்காலத்துக்கு நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், நேபாள இடைக்கால அரசின் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள சுசீலா கார்கிக்கு நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நேபாள மக்கள் அமைதி, முன்னேற்றம், செழிப்பு ஆகிவற்றைப் பெறுவதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.