புதுடெல்லி: இந்தியாவால் தேடப்படும் நீரவ் மோடி, விஜய் மல்லையாவை ஒப்படைக்குமாறு இந்தியா கோரி வரும் நிலையில், டெல்லியில் உள்ள திஹார் சிறையை இங்கிலாந்து குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.
இந்திய வங்கிகளில் பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை என தொழிலதிபர் விஜய் மல்லையா மீது புகார் எழுந்தது. இந்நிலையில் அவர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதுபோல, வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,800 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனிடையே லண்டன் தப்பிச் சென்ற அவர் கடந்த 2019-ம் ஆண்டு அங்கு கைது செய்யப்பட்டார்.
இவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்து விட்டது. ஆனாலும், இந்திய சிறைகளில் போதுமான பாது காப்பு வசதிகள் இல்லை என்பதால் தங்களை நாடு கடத்தக் கூடாது என நீரவ் மோடி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனால் அவர்களை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதனிடையே, தங்களிடம் ஒப்படைக்கும் நிதி மோசடி குற்றவாளிகளை திஹார் சிறையில் அடைத்து மனிதத்தன்மையுடன் நடத்துவோம் என இந்தியா உறுதி அளித்துள்ளது. இதையடுத்து, அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தொடங்கி உள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்தின் கிரவுன் பிராசிகியூஷன் சர் வீஸ் (சிபிஎஸ்) குழுவினர் சமீபத் தில் டெல்லிக்கு வந்து திஹார் சிறையை ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள கைதிகளிடம் கலந்துரையாடினர். அப்போது, லண்டனிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் பாது காப்பான அறைகளில் அடைக் கப்படுவார்கள் என்றும் தேவைப் பட்டால் சிறை வளாகத்திலேயே அவர்களுக்காக தனி அறைகள் கட்டப்படும் என்றும் சிபிஎஸ் குழு வினரிடம் சிறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்தியாவில் குற்றச் செயலில் ஈடுபடும் பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடுகின்றனர். அந்த வகையில், வெளிநாடுகளில் வசிக்கும் 178 இந்தியர்களை ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதில் இங்கிலாந்தில் மட்டும் 20 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.