புதுடெல்லி: எஸ்ஐஆர் விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மக்களவை இன்று காலை கூடியதும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் மீண்டும் எழுப்பின.
விவாதத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதை அடுத்து எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டதால், அவை முதலில் 12 மணி வரையும் பின்னர் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டன.
2 மணிக்கு மக்களவை கூடியதும் எதிர்க்கட்சிகள் மீண்டும் எஸ்ஐஆர் விவகாரத்தை எழுப்பின. இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளன. நீதிமன்ற விசாரணையில் உள்ள விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க விதிகளில் இடமில்லை. மேலும், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது.” என தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற மக்களவையில் முக்கிய மசோதாக்கள் சட்டங்களாக நிறைவேற்ற உள்ளதால் உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் கிரண் ரிஜிஜு வலியுறுத்தினார்.
இதனை உறுப்பினர்கள் ஏற்காததால், மக்களவையில் அமளி நீடித்தது. இதையடுத்து, அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், அவையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தார். 2 மணிக்கு அவை மீண்டும் கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.