ஹைதராபாத்: நீதிமன்றத்துக்கு வெளியே வந்து, குற்றம் சாட்டப்பட்ட வயதான தம்பதியினரிடம் நீதிபதியே நேரில் விசாரணை நடத்தி தீர்ப்பளித்துள்ளார். நீதிபதியின் இந்த மனிதாபிமான செயல் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், ராமகூர் கிராமத்தை சேர்ந்தவர் கங்காராம் (75). இவரது மனைவி சோமம்மாள் (69). இந்த வயதான தம்பதியினர் மீது மருமகள் வரதட்சணை கொடுமை வழக்கு போட்டிருந்தார். இவ்வழக்கு நிஜாமாபாத் மாவட்டம், போதன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சரிவர நடக்க கூட முடியாத இந்த வயதான தம்பதியினர், ஒவ்வொரு வாய்தாவிற்கும் கஷ்டப்பட்டு நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராயினர்.
இவ்வழக்கை நீதிபதி சாய் சிவா விசாரித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதும் கூட நடக்க முடியாமல் அந்த மூத்த தம்பதியினர் ஒரு ஆட்டோவில் நீதிமன்றத்துக்கு வந்தனர். ஆனால், கங்காராமால் ஆட்டோவில் இருந்து இறங்கி நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்து வர முடியவில்லை.
இது குறித்து கங்காராமின் வழக்கறிஞர் நீதிபதிக்கு தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதி சாய் சிவா, அவரது இருக்கையில் இருந்து எழுந்து, நீதிமன்றத்திற்கு வெளியே ஆட்டோவில் இருந்த கங்காராமிடம் சென்று நேரில் விசாரணை நடத்தினார்.
அதன் பின்னர், இந்த வயதான தம்பதிகள் மீது எந்த தவறும் இல்லை என்றும், வேண்டுமென்றே வரதட்சணை கொடுமை வழக்கை அவர்களது மருமகள் போட்டுள்ளார் என்றும் அவரது குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரங்களும் சரிவர இல்லை என்றும் கூறி, இவ்வழக்கை தள்ளுபடி செய்தார். நீதிபதி சாய் சிவாவின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, நீதிபதியின் மனிதாபிமானத்தை பொதுமக்கள் புகழ்ந்து வருகின்றனர்.