புதுடெல்லி: தீ விபத்தில் பண மூட்டைகள் சிக்கிய விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர உச்சநீதிமன்ற அறிக்கையை பகிரும்படி மத்திய அரசிடம் காங்கிரஸ் கூறியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் சில மாதங்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது ஒரு அறையில் எரிந்த நிலையில் பண மூட்டைகள் சிக்கிய விவகாரம் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் இது குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைத்தது. அந்த அறிக்கையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது குற்றம்சாட்டப்பட்டதால், அவரை பதவி விலகும்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா கூறினார்.
ஆனால், இந்த பணத்துக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறிய நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி விலக மறுத்து விட்டார். இதனால் அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பணி ஏதும் வழங்கப்படவில்லை. நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர நீதிபதி சஞ்சீவ் கண்ணா அரசுக்கு பரிந்துரைத்தார்.
அதனடிப்படையில் நீதிபதி யஷ்வந்த வர்மா மீது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகளின் ஆதரவை அரசு கோரியுள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையை மத்திய அரசு பகிர வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது. இது குறித்து எடுக்கப்படும் முடிவை பின்னர் தெரிவிப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.