கொச்சி: மாவட்ட நீதித் துறையின் நீதிமன்ற செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழிநுட்பத்தின் பொறுப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு தொடர்பான கொள்கையை கேரள உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
அதில், ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக பயன்படுத்துவது தனியுரிமை உரிமைகளை மீறுதல், தரவு பாதுகாப்பு அபாயங்கள், நீதித் துறை முடிவெடுப்பதில் நம்பிக்கை இழப்பு உள்ளிட்ட எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மாவட்ட நீதித் துறை அதன் பயன்பாட்டில் தீவிர முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்க சாட்ஜிபிடி, ஜெமினி, டீப்ஸீக் போன்ற ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்தக்கூடாது. ஏஐ கருவிகள் பொறுப்பான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஏஐ நீதித் துறை முடிவுகளை எடுப்பதற்கோ அல்லது சட்டப்பூர்வமான பகுத்தறியும் பணிகளுக்கோ மாற்றாக பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
நீதித் துறை ஊழியர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் வெளிப்படைத் தன்மை, ரகசியத்தன்மை, நியாயத்தன்மை, பொறுப்புணர்வை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்த கொள்கையின் நோக்கம். இதனை மீறுவது ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும். இவ்வாறு கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.