புதுடெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்துவதே அரசின் முதன்மையான இலக்காக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: மத்திய அரசைப் பொருத்தவரையில் பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்துவது, அதற்கு தேவையான ஆதரவுகளை வழங்குவது ஆகியவற்றை முதன்மை யான இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு ஆண்டும் மூலதன செலவினங்களை அதிரிக்க வேண்டும் என்று நிதியமைச்சகத்துக்கு தனிப்பட்ட முறையில் அழுத்தம் கொடுத்து வருகிறார். அதனால்தான் பொது முதலீட்டுக்கு அதிக முன்னுரிமை தரப்பட்டு வருகிறது. எனக்கு தெரிந்த தரவுகளின் அடிப்படையில், முதலீடு என்பது நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு முதன்மையான அடிப்படை.
அந்த வகையில், இந்தியா அதிக முதலீட்டைப் பெறுவதற்கு இந்தியாவின் நட்பான அந்நிய நேரடி முதலீட்டு (எப்டிஐ) கொள்கை மிக முக்கிய காரணமாக விளங்குகிறது. தற்போது முதலீடுகளை ஈர்க்க மாநிலங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.