புதுடெல்லி: ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரம் மறுத்துள்ளது. கேரளாவின் இஸ்லாமிய மதத் தலைவர் அபுபக்கர் முஸ்லியாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் உறுதிப்படுத்திய நிலையில் வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.
இது குறித்து வெளியுறவு அமைச்சக வட்டாரம், “நிமிஷா பிரியா வழக்கில் சில தனி நபர்கள் பகிரும் தகவல் துல்லியமானது அல்ல.” என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை உறுதி செய்வது போல், நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான செய்தியினை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்த மதத் தலைவர் அபுபக்கர் முஸ்லியார், அந்தப் பதிவை நீக்கியுள்ளார்.
குற்றப் பின்னணி என்ன? – கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியில் சேர்ந்தார். கடந்த 2015-ல் அரசு செவிலியர் பணியை ராஜினாமா செய்த நிமிஷா, ஏமனைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து அங்கு புதிய மருத்துவமனையை தொடங்கினார்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மெஹ்திக்கு, நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்தினார். இதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த சனா நகர நீதிமன்றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. இதை ஏமன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, ஜூலை 16-ம் தேதி நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஏமன் அரசு அறிவித்திருந்தது.
சட்டரீதியான முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், மெஹ்தி குடும்பத்தினருக்கு ரூ.8.6 கோடி குருதிப் பணம் அளித்து நிமிஷாவை மீட்க அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனிடையே, நிமிஷாவின் மரண தண்டனையை தள்ளிவைக்குமாறு மத்திய அரசு சார்பில் ஏமன் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஏமனின் நட்பு நாடான ஈரான் மூலமாகவும் மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. கேரளாவை சேர்ந்த முஸ்லிம் மத தலைவர் கிராண்ட் முப்தி ஏ.பி.அபுபக்கர் முஸ்லியாரும் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இந்தப் பின்னணியில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக கேரளாவின் இஸ்லாமிய மதத் தலைவர் அபுபக்கர் முஸ்லியாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் தெரிவித்தது.