புதுடெல்லி: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அடுத்த குடியரசு துணைத் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகவும் அதன் காரணமாகவே ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாட்டின் குடியரசு துணைத் தலைவர் பதவி உட்பட பல்வேறு பதவிகளில் நாட்டுக்கு சேவை செய்ய ஜெகதீப் தன்கருக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அடுத்த குடியரசு துணைத் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகவும் அதன் காரணமாகவே ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த கேள்விக்கு பாட்னாவில் பதில் அளித்த அமைச்சர் நீரஜ் குமார் சிங் பப்லு, “அது ஒரு நல்ல விஷயம். நிதிஷ் குமார் பதவியேற்றால் அதில் என்ன பிரச்சினை?” என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஜெகதீப் தன்கர் பதவி விலகியதற்கான காரணம் அவருக்கும், அரசாங்கத்துக்கும் மட்டுமே தெரியும். இது குறித்து நாங்கள் எதுவும் கூற முடியாது. அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதும், ஏற்க மறுப்பதும் அரசாங்கத்தின் விருப்பம்” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாநிலங்களவையில் அலுவல் ஆலோசனைக் குழுவுக்கு ஜெகதீப் தன்கர் நேற்று மதியம் 12.30 மணிக்கு தலைமை தாங்கினார். இதில், அவைத் தலைவர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறிது நேரம் விவாதம் நடைபெற்றதை அடுத்து மீண்டும் மாலை 4.30 மணிக்கு அலுவல் ஆலோசனைக் குழு கூடுவது என முடிவெடுக்கப்பட்டது.
மாலை 4.30 மணிக்கு அலுவல் ஆலோசனைக் குழு ஜகதீப் தன்கர் தலைமையில் கூடியது. ஆனால், இதில் பங்கேற்க ஜே.பி. நட்டாவும், கிரண் ரிஜிஜுவும் வரவில்லை. அதுகுறித்த தகவலும் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த அவர், இன்று மதியம் 1 மணிக்கு அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தை ஒத்திவைத்தார்.
நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஜே.பி. நட்டாவும், கிரண் ரிஜிஜுவும் வேண்டுமென்றே கலந்து கொள்ளாததற்கு ஏதோ தீவிரமான காரணம் இருக்கிறது. இதனால்தான், இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் குடியரசு துணைத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையை அவர் காரணமாக கூறியுள்ளார். அந்த காரணம் மதிக்கப்பட வேண்டும். ஆனால், அவர் ராஜினாமா செய்ததற்கு வேறு ஆழமான காரணங்கள் உள்ளன என்பது உண்மை.
2014க்குப் பிந்தைய இந்தியாவை அவர் எப்போதும் பாராட்டி வந்தார். விவசாயிகளின் நலனுக்காகவும், நீதித்துறையின் பொறுப்புக்கூறல் மற்றும் கட்டுப்பாடு குறித்தும் அவர் அச்சமின்றி பேசிவந்தார். விதிமுறைகள், நெறிமுறைகளை கடைப்பிடிப்பவராக இருந்தார். ஆனால், அவர் தான் புறக்கணிக்கப்படுவதாக நம்பினார். ஜெகதீப் தன்கரின் ராஜினாமா, அவருக்கு உரிய பாராட்டுக்களை அவருக்கு வழங்குகிறது. அதேநேரத்தில் அவரை குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தவர்களை மோசமாகப் பேசுகிறது.” என குறிப்பிட்டிருந்தார்.
பாஜக எம்பி பகவத் கிஷண்ராவ் காரட், “குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர். தற்போது மருத்துவக் காரணங்களுக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி, “குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் நீண்ட ஆயுளுக்காக அவரை வாழ்த்துகிறேன். இருப்பினும், அவரது ராஜினாமா புரியாத புதிராகவே உள்ளது. தற்போது இந்த விவகாரம் மர்மமாக உள்ளது. அவர் ராஜினாமா செய்த விதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து அவர் தெளிவுபடுத்தினார் நன்றாக இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.