புதுடெல்லி: இந்தியாவின் நிக்கோபர் தீவுகள் பகுதியில் இன்று (ஜூலை 29) அதிகாலை 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், சபாங்கிலிருந்து மேற்கு-வடமேற்கே 259 கிலோமீட்டர் தொலைவில், இன்று நள்ளிரவு 12: 12 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6.5 ரிக்டர் என்பது சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இருந்தாலும், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்பதை சுனாமி எச்சரிக்கை மையத்தின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
அதேபோல, தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட தகவல்களின்படி வங்காள விரிகுடாவில் திங்கள் கிழமை நள்ளிரவு 11: 50 மணியளவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 6.82 டிகிரி வடக்கே அட்சரேகையிலும், 93.37 டிகிரி கிழக்கே தீர்க்கரேகையிலும் அமைந்திருந்தது. நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோமீட்டர் தொலைவில் பதிவானதால், அது ஆழமற்றதாக மாறியது என நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது.