புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் நுவபாடா மாவட்டம் சிகாபாஹல் கிராமத்தைச் சேர்ந்தவர் 95 வயது மூதாட்டி மங்கல்பாரி மஹாரா. தள்ளாத வயதில் இவரால் நடப்பதற்கு முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் இவரது வீட்டின் அருகே இருந்த தெரு நாய் ஒன்று, மூதாட்டி மஹாராவை கடித்தது. இதற்காக, மூதாட்டிக்கு உள்ளூர் ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், நாய் கடித்துள்ளதால் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால் ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி இல்லாததால் வெளியூர் சென்று செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார மைய அதிகாரி தெரிவித்தார்.
இதனால் மஹாரா, தடுப்பூசி போடுவதற்காக தனது கிராமத்துக்கு அருகிலுள்ள சினாப்பள்ளி சமூக சுகாதார மையத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் அந்த மாவட்ட டிரைவர்கள் சங்கத்தினர் ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதனால் அவருக்கு வாகனங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து 10 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் அமைந்துள்ள சினாப்பள்ளிக்குச் மஹாரா கால்நடையாகவே புறப்பட்டார். தள்ளாத வயதில் மிகவும் சிரமத்துக்கு இடையே அவர் 10 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே சென்றுள்ளார்.
நாய் கடித்த வலி, வெயில் போன்றவற்றால் அவர் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். இடையில் பிரச்சினைகள் இருந்தபோதும் மனம் தளராமல் நடந்து சென்று சிகிச்சை மையத்தை அடைந்தார்.அங்கு தடுப்பூசி போட்ட பிறகு, அவர் கிராமத்துக்கு 10 கிலோமீட்டர் வரை நடந்தே வீட்டுக்குத் திரும்பினார். அவருக்கு துணையாக அவரது மகன் குருதேவ் மஹாராவும் உடன் சென்றார்.
மூதாட்டி மஹாரா, 20 கிலோமீட்டர் தூரத்துக்கு நடந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் நடந்து சென்ற வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து சினாப்பள்ளி ஒன்றிய வளர்ச்சி அதிகாரி (பிடிஓ) கர்மி ஓரம் கூறும்போது, “இந்த சம்பவம் குறித்து நான் செய்திகள் வாயிலாக அறிந்துகொண்டேன். அந்த மூதாட்டிக்காக யாராவது ஒருவர் வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கலாம். ஸ்டிரைக் நடந்ததால் அவருக்கு வாகனம் ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.