புதுடெல்லி: “நான் ஒரு பகுதிநேர நடிகர்; முழுநேர அரசியல்வாதி” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்மிருதி இரானி. பாஜகவில் இணைந்த அவர், தொடர்ந்து கட்சிப் பணிகளை ஆற்றிவந்தார். 2014 முதல் 2024 வரை மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, 2024 தேர்தல் தோல்வியால் மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து, மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். `கியூன்கி சாஸ் பி கபி பஹு தி: ரீபூட்’ என்ற டி.வி. தொடரின் புரமோ நேற்று வெளியானது. அதில், ஸ்மிருதி இரானி நடித்துள்ளார். இந்தத் தொடரில் துளசி விர்வானி என்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றியுள்ளார்.
மீண்டும் நடிப்புக்கு திரும்பி இருப்பது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஸ்மிருதி இரானி, “முதலில் நான் ஓர் அரசியல்வாதி; முழுநேர அரசியல்வாதி. அதேநேரத்தில், பகுதிநேர நடிகர். மீண்டும் நடிக்க வந்திருப்பது பதற்றத்தை தருகிறதா என கேட்கிறீர்கள். நான் ஓர் அரசியல்வாதி. என் மீதான எந்த ஒரு தாக்குதலும் என்னை பதற்றப்படுத்தாது. எனினும், நான் 25 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சித் தொடரில் நடித்தபோது இருந்த நிலை இன்று இல்லை. மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதை உணர்கிறேன்.
தொலைக்காட்சி இண்டஸ்ட்ரி உருவாக்கும் வருவாய், அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது அதில் பணிபுரியும் பெரும்பாலான தனிநபர்களுக்கு அதற்குரிய மரியாதை கிடைப்பதில்லை. கடந்த ஆண்டு தொலைக்காட்சி இண்டஸ்ட்ரி ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஓடிடி இண்டஸ்ட்ரி ரூ.24 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இரண்டும் சேர்த்து ஏறக்குறைய ரூ.55 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டியுள்ளன. இது சந்தையில் நாம் உருவாக்கும் தாக்கத்தை குறிக்கிறது. இது வணிக வெற்றியை மட்டுமல்லாது, நமது கலாச்சாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்” என தெரிவித்துள்ளார்.