புதுடெல்லி: காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களுக்கு ரூ.100 கொடுத்து பெண்கள் அழைத்து வரப்படுகின்றனர் என்று பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத் கூறி வருகிறார். மேலும், டெல்லி விமானநிலையத்தில் பெண் சிஆர்பிஎப் வீராங்கனை ஒருவர் கங்கனாவை அறைந்தார்.
நடிகை கங்கனா ரனாவத் தமிழகத்துக்கு வந்தால், அவர் மீது சுமத்தப்பட்ட அவதூறு வழக்குகளை நினைவு கூர்ந்து அவர் “அறையப்பட வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி அண்மையில் கூறியிருந்தார். பாஜக எம்.பி.யை அவ்வாறு இவர் விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகை கங்கனா ரனாவத் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நான் தமிழ்நாடு வரும்போது என்னை அறைய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியிருக்கிறார். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். நான் தமிழ்நாடு செல்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இது நமது இந்தியா. நாம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். வரலாம். இதை யாராலும் தடுக்க முடியாது.
தமிழில் நான் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேடத்தில் ஒரு படத்தில் நடித்தேன். இந்தப் படம் தலைவி என்ற பெயரில் வெளியானது. இந்த விஷயத்தை நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்களிப்பின்போது, நான் வரிசையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது என்னை சில எம்.பி.க்கள் கடந்து சென்றனர். கடந்து சென்ற 4 எம்.பி.க்களில் 3 பேர் என்னை தலைவி என்று அழைத்தனர். அந்த அளவுக்கு அவர்கள் என் மீது பாசம் காட்டுகின்றனர்.
ஒரு தனிநபரின் தனிப்பட்ட கருத்துக்கள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. பெண்களுக்கு எதிரான இதுபோன்ற அவமரியாதையான கருத்துக்களை பொது இடத்தில் பயன்படுத்தக்கூடாது. அது மக்களுக்கு தவறான செய்தியை அனுப்பிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.