பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை பாரதிய ஜனதா கட்சி அரசியலாக்கியதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு காவல்துறையை பலிகடா ஆக்கியுள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியது குறித்து பேசிய சித்தராமையா, “அவர்கள் அரசியலுக்காக இதைச் செய்கிறார்கள். நான் இதில் அரசியல் செய்யவில்லை. வெளிப்படையாகப் பொறுப்பானவர்கள் மற்றும் தங்கள் கடமையில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என்று கூறினார்.
இதற்கிடையில், கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா மாநில அரசு அழுத்தம் கொடுக்கப்படும்போது மட்டுமே செயல்படுவதாக குற்றம் சாட்டினார். அவர், “நாங்கள் கொடுத்த அழுத்தத்திற்குப் பிறகுதான் ஆர்சிபி மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று, பெங்களூரு நகர காவல் ஆணையர் உட்பட மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஐந்து அதிகாரிகளை முதல்வர் திடீரென பணியிடை நீக்கம் செய்தார்.
உண்மையான குற்றவாளி முதல்வர் சித்தராமையா தவிர வேறு யாருமல்ல. 2-வது குற்றவாளி துணை முதல்வர் டி.கே.சிவகுமார். 3-வது குற்றவாளி உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா. அவர்கள் உண்மையிலேயே விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.
ஜூன் 4 அன்று சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பெங்களூரு நகர காவல் ஆணையர் தயானந்தா உட்பட பல ஐபிஎஸ் அதிகாரிகளை கர்நாடக காவல்துறை பணியிடைநீக்கம் செய்துள்ளது.
பெங்களூரு கூடுதல் காவல் ஆணையர் விகாஷ் குமார் விகாஷ், துணை காவல் ஆணையர் சேகர் எச்.டி, உதவி காவல் ஆணையர் பாலகிருஷ்ணா மற்றும் கப்பன் பார்க் காவல் ஆய்வாளர் கிரிஷ் ஏ.கே ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி சீமந்த் குமார் சிங், பெங்களூரு நகர காவல் ஆணையராகப் பொறுப்பேற்றார்.