ஜார்சுகுடா: ஒடிசாவில் ரூ.60,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளையடிக்கிறது’ என்று குற்றம் சாட்டி உள்ளார். ஒடிசாவில் முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் ஜார்சுகுடா நகரில் நேற்று அரசு நலத்திட்ட விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ரூ.60,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது: நாடு முழுவதும் 4 கோடி ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தில் ஒடிசாவில் மட்டும் 40,000 ஏழை குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன. ஒடிசாவில் புதிதாக 2 செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்க மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம் ஒடிசா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கப்பல் கட்டுமான திட்டத்துக்காக மத்திய அரசு சார்பில் அண்மையில் ரூ.70,000 கோடி திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒடிசாவில் கப்பல் கட்டுமான தளம் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மத்தியிலும் நாடு சுதந்திரம் அடைந்தது முதல் காங்கிரஸ் கட்சி, நாட்டை கொள்ளையடித்து வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு வழங்கினர். இதன் மூலம் காங்கிரஸின் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டது.
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப்பட்டது. உதாரணமாக ஒரு குடும்பத்தில் ஓராண்டுக்கு ரூ.1 லட்சம் செலவு செய்தால், ரூ.25,000 வரி செலுத்த வேண்டிய சூழல் இருந்தது. பாஜக ஆட்சிக் காலத்தில் இந்த வரி ரூ.5,000 ஆக குறைந்திருக்கிறது. இதன்மூலம் ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் மிகுந்த பலன் அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. எனவே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் இருந்து பொது மக்கள் விலகி இருப்பது நல்லது. திருப்பதி, பாலக்காடு உள்ளிட்ட 8 ஐஐடிகளில் ரூ.11,000 கோடி யில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் இந்த ஐஐடிகளில் கூடுதலாக 10,000 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர தெரிவித்தார். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.