கொல்கத்தா: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மூலம் ஏராளமானோரிடம் ரூ.100 கோடிக்கு மேல் பணம் பறித்த கும்பலை சேர்ந்த பெண் உட்பட 9 பேருக்கு, நாட்டிலேயே முதல்முறையாக மேற்கு வங்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
சமீபகாலமாக, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது. வீடியோ அழைப்பில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் தங்களை அரசு உயர் அதிகாரிகள் என்று அறிமுகம் செய்துகொள்வார்கள். “உங்கள் பெயரில் போதை பொருள் கடத்தப்பட்டுள்ளதால், டிஜிட்டல் அரெஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளீர்கள். இதில் இருந்து தப்ப வேண்டுமானால், நாங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றுங்கள்” என்று கூறுவார்கள்.
இந்தியாவில் இதுபோல வீடியோ வழியில் தொடர்பு கொண்டு டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய சட்டத்தில் இடம் இல்லை என்று மத்திய அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும், அரசு அலுவலகம் போன்ற பின்னணியில் அதிகாரிகள் போலவே சீருடை அணிந்த நபர்கள் மிரட்டுவதால், அப்பாவி மக்கள் இதை நம்பி பணத்தை இழக்கின்றனர்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் ரனாகட் நகரை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் தன்னை டிஜிட்டல் அரெஸ்ட் கும்பல் 7 நாட்கள் சிறை பிடித்து மிரட்டியதாகவும், அவர்கள் கூறியபடி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ 1 கோடி அனுப்பியதாகவும் ரனாகட் காவல் நிலையத்தில் 2024 நவம்பரில் புகார் கொடுத்தார். மும்பை அந்தேரி காவல் நிலைய எஸ்.ஐ. ஹேம்ராஜ் கோலி பேசுவதாக கூறி தன்னிடம் மோசடி நடந்ததாகவும் அவர் கூறினார்.
அதன் அடிப்படையில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் கும்பலை சேர்ந்த பெண் உட்பட 13 பேரை கைது செய்தனர். இந்த கும்பல் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 108 பேரிடம் ரூ.100 கோடி வரை பணம் பறித்தது தெரியவந்தது.
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கல்யாணி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. 2,600 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கல்யாணி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சுபர்தி சர்கார் தீர்ப்பளித்துள்ளார். 4 பேர் மீது விசாரணை நடந்து வருகிறது. டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.