புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் மேலும் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியாவின் தொழில்நுட்ப திறனை பார்த்து உலகம் வியந்தது. பாகிஸ்தான் ராணுவம், நமது ராணுவ தளங்கள், விமானப் படைத்தளங்கள்,வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்களை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தியது.
அனைத்து ஏவுகணைகளும் ட்ரோன்களும் நடுவானில் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானால் சிறிய சேதத்தைக்கூட ஏற்படுத்த முடிய வில்லை. வரும் 2035-ம் ஆண்டுக்குள் மருத்துவமனைகள், ரயில்வே கட்டமைப்புகள், வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு புதிய தொழில்நுட்ப தளங்கள் மூலம் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்.
மகாபாரத போர் நடந்தபோது கிருஷ்ணர் தனது சுதர்சன சக்கரத்தால் சூரிய ஒளியைத் தடுத்து பகலை இரவாக்கினார். சுதர்சன சக்கரத்தால் சூரிய ஒளி தடுக்கப்பட்டது, அர்ஜுனன், ஜெயத்ரதனை கொல்ல எடுத்த சபதத்தை நிறைவேற்ற முடிந்தது. இது சுதர்சன சக்கரத்தின் வலிமை ஆகும்.
இதேபோல நாட்டின் வான் பாதுகாப்புக்காக சுதர்சன சக்கர திட்டம் தொடங்கப்படும். இந்த சுதர்சன சக்கரம் சக்திவாய்ந்த ஆயுத அமைப்பாக இருக்கும், எதிரியின் தாக்குதலை முறியடிப்பது மட்டுமல்லாமல், எதிரியை பல மடங்கு அதிகமாகத் தாக்கும் வலிமையைக் கொண்டிருக்கும்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் அவசரநிலை அமல் செய்யப்பட்டபோது அரசியலமைப்பு சட்டத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டது. இதை ஒருபோதும் மறக்கக்கூடாது. நாம் ஒன்றிணைந்து அரசியலமைப்பு சட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.
வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும். இதற்காக யாருக்கும் தலைவணங்கவோ, அடிபணியவோ மாட்டோம். ஒன்றுபட்டு கடினமாக உழைப்போம். வெற்றி இலக்கை எட்டுவோம்.ஏற்கெனவே 4 செமி கண்டக்டர் ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
புதிதாக 6 செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தையில் கிடைக்கும்.புனல் மின்சாரத்தை அதிகரிக்க புதிய அணைகளைக் கட்டி வருகிறோம். பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை முதலீடு செய்து வருகிறோம். புதிதாக 10 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பெட்ரோல், டீசல், எரிவாயு இறக்குமதிக்காக பெரும் தொகையை செலவிட்டு வருகிறோம். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கடலுக்கு அடியில் எண்ணெய் வளம், எரிவாயு வளத்தை கண்டறிய தேசிய ஆழ்கடல் ஆய்வுப் பணியை தொடங்க உள்ளோம். கனிமங்கள் வளத்தில் சுயசார்பை எட்ட நாடு முழுவதும் 1200 க்கும் மேற்பட்ட இடங்களில் அகழ்வாய்வு பணிகள் நடைபெறுகின்றன.
நமது குரூப் கேப்டன் ஷுபான்ஷு சுக்லா அண்மையில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பினார். அடுத்த கட்டமாக நமது வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு தயாராகி வருகிறோம். அடுத்து சொந்தமாக விண்வெளி நிலையத்தை உருவாக்க பணியாற்றி வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காமில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். அதற்காக நடத்தப்பட்ட பதிலடிதான் ஆபரேஷன் சிந்தூர். இதற்காக ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. எதிரியின் தொலைதூர பகுதிகளில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இன்றளவும் பாகிஸ்தான் தூக்கமின்றி தவித்து வருகிறது.
தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் வேட்டையாடப்படுவார்கள். எதிரிகளின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது. ஒருவேளை எதிரிகள் அணு ஆயுத தாக்குதல் நடத்த முயற்சி செய்தால் நமது ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் மோடி தி்ட்டவட்டமாக கூறினார்.
3.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்: இன்றைய தினம் இளைஞர்களின் நலனுக்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் ஒவ்வொருவருக்கும் அரசு சார்பில் ரூ. 15,000 வழங்கப்படும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். சுமார் 3.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு புகழாரம்: சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறியதாவது: 100 ஆண்டுகளுக்கு முன்பு ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) நிறுவப்பட்டது. அதன் தொண்டர்கள் ஒரு நூற்றாண்டு காலமாக தாய்நாட்டின் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளனர்.
சேவை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் ஆகியவை அதன் அடையாளங்கள். உலகின் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு அமைப்பாக ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. அதன் சேவைக்கு பங்களித்த தொண்டர்களையும் வணங்குகிறேன். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அர்ப்பணிப்புள்ள பயணத்தில் தேசம் பெருமை கொள்கிறது என்றார் பிரதமர் நரேந்திர மோடி.