புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது.
கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையின் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன் பிறகு அடுத்தடுத்து உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலை நமது பாதுகாப்புப் படை முறியடித்தது. மேலும், அந்நாட்டு விமானப்படை தளம் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்தியது. இதனிடையே, பாகிஸ் தான் கேட்டுக் கொண்டதையடுத்து கடந்த 10-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதையடுத்து, இந்திய ராணுவ செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், பாகிஸ்தான் ராணுவ செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் காசிப் அப்துல்லாவுடன் கடந்த 12-ம்தேதி தொலைபேசியில் பேசினார். அப்போது இரதரப்பிலும் எல்லையில் படைகளை குறைக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையின் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் (சிசிஎஸ்) நேற்று நடைபெற்றது.
தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற 11-வது கூட்டம் இது ஆகும். இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹெச்.சி.எல்.-ஃபாக்ஸ்கான் ஆலை: இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், உத்தரபிரதேசத்தில் ஹெச்.சி.எல்., ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் இணைந்து அமைக்கும் செமி கண்டக்டர் தொழிற்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.3,706 கோடி மதிப்பில் உருவாகும் இந்த திட்டத்தால் 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிய
வந்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் ஜேவர் பகுதியில் ரூ.3,706 கோடி செலவில் நாட்டின் 6-வது செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்த தொழிற்சாலையை ஹெச்.சி.எல். – ஃபாக்ஸ்கான் ஆகிய நிறுவனங்கள் இணைந்து அமைக்கின்றன. இந்த தொழிற்சாலையில் செல்போன், லேப்டாப், ஆட்டோமொபைல் உள்ளிட்ட சாதனங்களுக்கு தேவையான டிஸ்பிளே டிரைவர் சிப்கள் தயாரிக்கப்படும். இந்த தொழிற்சாலை 2027-ம் ஆண்டு செயல்பட தொடங்கும்.
இந்த தொழிற்சாலையின் மூலம் 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். உத்தர பிரதேசத்தில் அமையும் இந்த தொழிற்சாலையில் 3.6 கோடி சிப்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையானது ஜேவர் விமான நிலையம் அருகே யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில் வளர்ச்சி ஆணையத்தால் அமைக்கப்படும்.
இந்தியாவில் செமி கண்டக்டர் தொழிற்சாலை இயக்கத்துக்காக பல்வேறு மாநிலங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது உத்தரபிரதேசத்தில் அமைவது 6-வது செமி கண்டக்டர் தொழிற்சாலையாகும். முன்னதாக முதல் 5 செமி கண்டக்டர் தொழிற்சாலைகள் குஜராத், அசாம் மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.
உத்தரபிரதேச தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் சிப்கள், இந்தியாவின் 40 சதவீத தேவையை நிறைவு செய்யும். இது ஒரு பெரிய ஆலை. இது உலகின் பிற பகுதிகளுக்கான ஃபாக்ஸ்கானின் தேவைகளையும் பூர்த்தி செய்யும்.
ஹெச்.சி.எல். – ஃபாக்ஸ்கான் இணைந்து உருவாக்கும் இந்த ஆலை வெகு விரைவில் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்தியாவில் மின்னணு உற்பத்தி துறையில் தற்போது சுமார் 25 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
முர்முவுடன் முப்படை தலைமை தளபதி சந்திப்பு: முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் ராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேற்று சந்தித்தனர். அப்போது, கடந்த 7 முதல் 10-ம் தேதி வரை பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூர்’ எப்படி திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து முர்முவிடம் எடுத்துரைத்தனர். இதையடுத்து, பாதுகாப்பு படையின் வீரம் மற்றும் அர்ப்பணிப்பை குடியரசுத் தலைவர் முர்மு பாராட்டினார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.