பாட்னா: நிதிஷ் குமாரும் பாஜகவும் இணைந்து நாட்டின் குற்ற தலைநகராக பிஹாரை மாற்றிவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பிஹாரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொழிலதிபர் கோபால் கெம்கா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி அரசை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
“பிஹாரை ஆட்சி செய்யும் பாஜக-நிதிஷ்குமார் கூட்டணி, நாட்டின் குற்ற தலைநகராக பிஹாரை மாற்றியுள்ளது. தொழிலதிபர் கோபால் கெம்கா வெளிப்படையாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமே இதற்கு உதாரணம். கொலை, கொள்ளை, துப்பாக்கி சூடு போன்ற குற்றச் சம்பவங்கள் பிஹாரில் இயல்பாகிவிட்டது. இவற்றைத் தடுப்பதில் ஆளும் அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.
பிஹாரில் வாழும் சகோதர சகோதரிகளே, இனியும் இத்தகைய அநீதிகளை பொறுத்துக் கொள்ள வேண்டுமா? உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத இந்த ஆட்சியாளர்கள் வசம் உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்குமா?
கொலை, கொள்ளை, துப்பாக்கி சூடு என அரங்கேறும் ஒவ்வொரு குற்ற சம்பவமும் மாற்றத்துக்கான முழக்கமாகும். அச்சமற்ற, முன்னேற்றத்தை நோக்கிச் செல்லக்கூடிய புதிய பிஹாருக்கான நேரம் இது. இந்த முறை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஆட்சி மாற்றத்துக்கு மட்டுமல்ல; பிஹாரை காப்பதற்கும்கூட” என ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 243 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம், பாஜக, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ் பிரிவு) ஆகியவை ஒரு கூட்டணியாகவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் தேர்தலை சந்திக்க உள்ளன. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிட உள்ளன.