புதுடெல்லி: சகோதர உறவை போற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 9-ம் தேதியான இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது, சகோதரிகள் மீது சகோதரர்கள் காட்டும் பாசப் பண்டிகை ஆகும்.
ஒரே குடும்பத்தில் பிறந்த உடன்பிறப்புகள் மற்றும் உடன்பிறவா சகோதர, சகோதரிகளுக்கு இடையில் கொண்டாடப்படும் பண்டிகை. இதை, ஷ்ரவண் பூர்ணிமா புனித நூல் அல்லது ராக்கி கயிறு எனும் நூலை சகோதரர்களின் கையில் கட்டி சகோதரிகள் மகிழ்கிறார்கள்.உலகளாவிய பல்வேறு வகைப் பாதுகாப்பு மற்றும் மதநல்லிணக்கத்தையும் இந்த பண்டிகை பிரதிபலிக்கிறது. சமூகம் மற்றும் இயற்கையின் மீதான ஆழமான அர்ப்பணிப்பிற்கும் இந்த பண்டிகை ஒரு சக்திவாய்ந்த சான்று.
இந்த பண்டிகை, நம் நாட்டின் ஒவ்வொறு மாநிலங்களின் உள்ளூர் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது. இதனால், ரக்ஷா பந்தன் நாளை ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொறு விதமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். மத்தியப் பிரதேசம், பிஹார் மற்றும் ஜார்கண்டின் சில பகுதிகளில் ரக்ஷா பந்தன் கஜாரி பூர்ணிமாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டி பரிசுகளைப் பெறுகிறார்கள்.
திருவிழாவின் தனித்துவமான மரபுகளில் பெண்கள் வயல்களில் இருந்து மண் பானைகளைக் கொண்டு வருகிறார்கள். அவற்றில் பார்லியை நட்டு வைக்கும் வழக்கமும் உள்ளது. இந்தப் பானைகள் அரிசி பசையால் வர்ணம் பூசப்படுகின்றன, பின்னர் பெண்கள் அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று அருகிலுள்ள குளம் அல்லது ஆற்றில் மூழ்கடிக்கிறார்கள்.
பெண்கள் தங்களது மகன்கள் மற்றும் சகோதரர்களின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்து உண்ணாவிரதத்தையும் கடைபிடிக்கின்றனர். கஜ்ரி போன்ற நாட்டுப்புறப் பாடல்கள், நடனங்கள் மற்றும் கதை சொல்லல் போன்றவையும் நடைபெறுகின்றன.
குறிப்பாக, உ.பி.யின் வாராணசி மற்றும் மதுரா போன்ற புனித நகரங்களின் பகுதிகளில், இந்த விழா மேலும் வளமையாகக் கொண்டாப்படுகிறது. இந்நாளை, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஆவணி அவிட்டமாக கொண்டாடுகின்றன. ஒடிசாவில் கொண்டாடப்படும், ரக்ஷா பந்தன், கம்ஹா பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இது உடன்பிறந்தோரின் பிணைப்பையும் அவர்களது கடவுள்களிள் ஒருவரான பாலபத்திரரின் பிறந்தநாள்களையும் கவுரவிக்கும் ஒரு பண்டிகையாகும்.
ஒடிசாவின் ஜெகந்நாதர் கோயிலில் சிறப்பு சடங்குகள் நடைபெறுகின்றன. இந்நாளில், கம்ஹா தியான் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. பகவான் பாலபத்ரரின் ஆயுதமான லங்காலாவை (மரக் கலப்பை) நம்பியிருக்கும் விவசாய சமூகங்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றன. ஒரு முக்கிய சடங்கில் பகவான் ஜெகந்நாதருக்கு அவரது சகோதரியான தேவி சுபத்ரா சிறப்பு ராக்கிகளைக் கட்டும் சடங்கும் உண்டு.
ராஜஸ்தானில், ரக்ஷா பந்தனில் கட்டப்படும் புனிதக் கயிற்றை லும்பா ராக்கி என்று அழைக்கிறார்கள், இது ஒரு தனித்துவமான பாரம்பரிய மார்வாரிகள் மற்றும் ராஜஸ்தானியரின் கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் பண்டிகையாக உள்ளது. இம்மாநிலத்தில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களது அண்ணியார்களுக்கு ராக்கி கட்டும் வழக்கம் உள்ளது.
இந்த லும்பா ராக்கிகள் பெரும்பாலும் அலங்கார வளையல்கள் போல வடிவமைக்கப்படுகின்றன. இவற்றில் ராஜஸ்தானின் வளமான கைவினைப் பாரம்பரியத்தை வெளிப்படுத்துபவையாக அமைகின்றன. மணிகள், கண்ணாடிகள் மற்றும் சிக்கலான எம்பிராய்டரிகளால் அலங்கரிக்கப்பட்டதாக அமைகின்றன. குஜராத்தில் பவித்ரோபனா எனப்படும் தனித்துவமான பாரம்பரியத்துடன் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.
சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டும் அதே வேளையில், பகவான் சிவனிடம் வலுவான பக்தி உணர்வையும் வெளிப்படுத்தும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த புனித நாளில், பக்தர்கள் சிவலிங்கத்திற்கு தண்ணீர் வழங்கி ஆசி பெறுகிறார்கள்.
பவித்ரோபனாவில் சிவனை வழிபடுவது அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட உதவுவதாக நம்பிக்கை உள்ளது. உத்தரகண்டில் ரக்ஷா பந்தன் நாளில் ஸ்ரவாணி மரபுகளில் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில், மக்கள் கங்கை உள்ளிட்ட நதியில் புனித நீராடி, முனிவர்களை வணங்குதல் மற்றும் ஒரு புதிய புனித நூலை அணிதல் போன்ற சடங்கைச் செய்கிறார்கள்.