புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் 12-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேச தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். அவர் தொடர்ச்சியாக 12-வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியேற்ற உள்ளார்.
செங்கோட்டைக்கு வரும் பிரதமர் மோடியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் சஞ்சய் சேத், செயலாளர் ராஜேஷ் குமார் சிங் வரவேற்பார்கள். ராணுவம், கடற்படை, விமானப் படை மற்றும் டெல்லி காவல் துறையை சேர்ந்த வீரர்களின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொள்வார்.
விழாவை ஒட்டி செங்கோட்டை வளாகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சுமார் 11,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் காவல், ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செங்கோட்டை வளாக பகுதிகளில் சுமார் 3,000 போலீஸார் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் தடுப்பு கவசங்கள், வாகனங்களில் வெடிபொருட்கள் இருக்கிறதா என்பதை கண்டறியும் சிறப்பு கருவிகள், முக அடையாளத்தை காண்பிக்கும் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை செங்கோட்டை வளாகத்தில் பொருத்தப்பட்டு உள்ளன.
செங்கோட்டை சுதந்திர தின விழாவுக்காக அச்சிடப்பட்டிருக்கும் அழைப்பிதழில் ஆபரேஷன் சிந்தூரின் சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஆபரேஷன் சிந்தூரை விவரிக்கும் வகையில் செங்கோட்டை வளாகத்தில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசிய கொடியேற்றும்போது ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்கள் தூவப்படும்.
செங்கோட்டை சுதந்திர தின விழாவில் நாடு முழுவதும் இருந்து 85 பஞ்சாயத்து தலைவர்கள், பாதுகாப்புப் படை, விளையாட்டு, தன்னார்வ தொண்டு ஊழியர்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 5,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். தேசிய கீதம் இசைக்கும் இசைக் குழுவில் முதல்முறையாக 11 அக்னி வீரர்கள் பங்கேற்கின்றனர்.