புதுடெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். அந்த நபர்கள் பயன்படுத்திய செல்போன் எண்கள், ஓடிபி விவரங்களை ஒரு வாரத்துக்குள் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கெடு விதித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அங்கு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. வாக்குகள் திருடப்படுவதாகவும், இதில் பாஜகவுடன், தேர்தல் ஆணையம் கூட்டுசேர்ந்து சதி செய்வதாகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி நேற்று கூறியதாவது: ‘வாக்கு திருட்டு 2.0’ தகவலை தற்போது ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். நாடு முழுவதும்காங்கிரஸ் கட்சி செல்வாக்காகஇருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது. கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்காளர்களை நீக்கும் முயற்சி நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில் ஒரு சிறு பகுதியாக இருக்கலாம்.
கோதாபாய் என்ற பெண்ணின் பெயரைப் பயன்படுத்தி உள்நுழைவு (லாகின்) அடையாள எண் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவருக்கு தெரியாமலேயே 12 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. போலி உள்நுழைவு அடையாள எண், சந்தேகத்துக்குரிய, வெளிமாநில செல்போன் எண்களை பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளது. அதேபோல, சூர்யகாந்த் என்பவரது பெயரில் இருந்து 14 நிமிடங்களில், 12 வாக்காளர்களை நீக்குவதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நீக்கப்பட்ட வாக்காளர்கள் சூர்யகாந்த், பபிதா சவுத்திரி ஆகியோர் உங்கள் முன்புதான் உள்ளனர்.(அவர்களை மேடையில் அறிமுகம் செய்தார்.)
நாகராஜ் என்பவர் அதிகாலை 4.07 மணிக்கு 2 வாக்காளர்களை நீக்குவதற்கான விண்ணப்பங்களை 38 விநாடிகளில் சமர்ப்பித்துள்ளார். தனி நபர்கள் இது போல விண்ணப்பிப்பது சாத்தியம் அல்ல. எனவே, அழைப்பு மையங்களில் (கால் சென்டர்) பயன்படுத்தப்படும் மென்பொருள் மூலமாக இந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பல மாநிலங்களில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க ஒரே செல்போன் எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, புதிதாக வாக்காளர்களை சேர்க்கவும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் ராஜுரா சட்டப்பேரவை தொகுதியில் போலியாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு வாக்காளரின் பெயர் ‘YUH UQJJW’ எனவும் அவரது முகவரி ‘sasti, sasti’ என்றும் உள்ளது.
கர்நாடகா, மகாராஷ்டிரா, பிஹார், ஹரியானா, உத்தர பிரதேசத்தில் இதே முறையில் வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ளவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாக்கிறார்.
ஒரு வாரம் கெடு: ஆன்லைன் மூலமாக வாக்காளர் பெயர் நீக்கப்பட்டது தொடர்பான தகவல்களை அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு கர்நாடக சிஐடி போலீஸார் கடந்த 18 மாதங்களில் 18 கடிதங்கள் அனுப்பினர். ஆனால், தேர்தல் ஆணையம் உருப்படியாக எந்த பதிலும் தரவில்லை. அரசியல்சாசனம் மீது தாக்குதல் நடத்தி அழிப்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார். கர்நாடக சிஐடி போலீஸார் கேட்கும் செல்போன் எண்கள், ஓடிபி விவரங்களை, தேர்தல் ஆணையம் ஒரு வாரத்துக்குள் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், வாக்கு திருட்டில் ஈடுபடுவோரை தலைமை தேர்தல் ஆணையர் தீவிரமாக பாதுகாக்கிறார் என்பது உறுதியாகிவிடும்.இவ்வாறு ராகுல் கூறினார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டு என தேர்தல் ஆணையம் மறுப்பு: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை. அவர் கூறுவதுபோல வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு பெயரையும் ஆன்லைனில் நீக்க முடியாது. தவிர, பாதிக்கப்படும் நபரின் கருத்தை அறியாமல் அவரது பெயரை யாரும் நீக்க முடியாது.
2023-ல் கர்நாடகாவின் ஆலந்த் சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளர்களின் பெயர்களை நீக்க சில முயற்சிகள் நடந்தன. ஆனால், அவை தோல்வியில் முடிந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்தால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.ஆலந்த் தொகுதியில் 2018-ல் பாஜகவின் சுபாத் குட்டேதரும், 2023-ல் காங்கிரஸ் கட்சியின் பி.ஆர்.பாட்டீலும் வெற்றி பெற்றனர். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
‘ராகுல் நீதிமன்றம் செல்லலாம்’ – முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியபோது, ‘‘அரசியல்சாசன அமைப்புகள் மீதான ராகுல் காந்தியின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள், இந்திய ஜனநாயகத்தின் மீது அவருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நம்பிக்கை இல்லாததையே காட்டுகிறது. ராகுல் காந்தி தனது புகார்களுக்கு வலிமை இருப்பதாக கருதினால் நீதிமன்றம் செல்லலாம். அவர் கூறிய தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு திருட்டு நடந்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருக்க முடியுமா?’’ என்றார்.