புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்துக்குள் இன்று காலையில் சுவர் ஏறி குதித்து அத்துமீறி நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்துக்குள் இன்று காலை 6.30 மணியளவில் ஒரு நபர் மரத்தில் ஏறி சுவர் மீது குதித்து உள்ளே நுழைந்தார். ரயில் பவன் பக்கத்திலிருந்து சுவர் தாண்டி குதித்து ஊடுருவியவர், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கருடா வாயிலை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுவர் ஏறி குதித்து ஊடுருவிய நபர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும் அனலை கிளப்பிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஆண்டு இதேபோன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் ஒன்று நடந்தது. அப்போது 20 வயதுடைய நபர் நாடாளுமன்ற வளாகத்தில் சுவர் ஏறி அனெக்ஸ் கட்டிடத்தின் உள்ளே குதித்தார். இந்த சம்பவத்தின் ஒரு வீடியோவும் வெளியாகியிருந்தது. அவரை சிஐஎஸ்எப் வீரர்கள் கைது செய்தனர், அவரிடம் ஆயுதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டும் அதேபோன்றொரு அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளது.