புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட சில எம்பிக்கள் மின்டா தேவி (Minta Devi) என்ற பெயர் பொறிக்கப்பட்ட டி ஷர்ட்களை அணிந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
இந்திய தேர்தல் ஆணையம் பிஹாரில் நடத்தி வரும் சிறப்பு தீவிர திருத்தத்தை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரும், தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரும் தேர்தல் ஆணையத்தின் உயிரை பறித்துவிட்டார்கள்.
இந்த இரு தேர்தல் ஆணையர்களாலும் இந்தியாவின் ஜனநாயக செயல்முறை கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. அவர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் பாஜகவின் ஒரு கிளையாக மாற்றிவிட்டார்கள். இதற்கான ஒரு உதாரணம்தான் Minta Devi. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் Minta Devi ஒரு முதல்முறை வாக்காளர். ஆனால், அவரது வயது 124. எனவேதான், சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க நாங்கள் வலியுறுத்துகிறோம்” என தெரிவித்தார்.

மற்றொரு காங்கிரஸ் எம்பியான கார்த்தி சிதம்பரம், “நாங்கள் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டை முன்வைத்தால் பாஜக ஏன் பதில் அளிக்கிறது? எங்கள் முழு குற்றச்சாட்டும் தேர்தல் ஆணையத்தை நோக்கி மட்டுமே இக்கிறது. அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு நடுநிலை அமைப்பு அது. எங்கள் கேள்விகள் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு பதில் சொல்லும் திறனும் கட்டமைப்பும் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு” என்று தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் குழு தலைவரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜி, “நேற்று ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் டெல்லியில் போராட்டம் நடத்திய பல எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் டெல்லி போலீசார் நடந்து கொண்ட விதம், தேர்தல் ஆணையம் அச்சமடைந்து போயிருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. அவர்களிடம் எங்கள் கேள்விகளுக்கு பதில் இல்லை. உங்களிடம் பதில் இருந்தால், குஜராத் மற்றும் மேற்குவங்கத்தில் ஒரே EPIC எண்ணைக் கொண்ட வாக்காளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை விளக்குங்கள்?
வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் ஒரே பெயரில் வாக்காளர்கள் எப்படி இருக்கிறார்கள்? வாக்காளர் பட்டியலில் பிழை இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. தேர்தல் ஆணையம் சரியாகச் செயல்படக்கூடிய ஒரு அமைப்பு என்று நாம் கருதுவதால்தான், ஒரு வருடத்துக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகளை நாம் ஏற்றுக்கொண்டோம். அதன் அடிப்படையில்தான், நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர், சுகாதார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் என பலரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்தது உண்மையானால், முழு மக்களவையையும் தேர்தல் ஆணையம் கலைக்க வேண்டும். நீங்கள், சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து நடத்த விரும்பினால் நடத்துங்கள். ஆனால், அதற்கு முன்பாக மக்களவை கலைக்கப்பட வேண்டும். மத்திய அரசு கலைக்கப்பட வேண்டும். ஏனெனில், இந்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையில்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்துப் பேசிய பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால், “எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் ஆதாரங்களைக் கேட்டது. ஒரு அரசியலமைப்பு அமைப்புக்கு எதிராக அவர்கள்(எதிர்க்கட்சிகள்) கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்டால், அவர்கள் ஆதாரம் தருவதில்லை.
தேர்தல் ஆணையம் 30 எம்பிக்களை பேச்சுவார்த்தை நடத்த அழைத்தது. ஆனால் அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை, அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அவர்கள் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள். வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் ஒருவர் தனது சொந்த அரசுக்கு எதிராக கேள்விகளை எழுப்பினார். அதனால், தற்போது, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.