புதுடெல்லி: பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று 8-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஹாரில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் சிறப்பு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிப்பதே இதன் நோக்கம் என்று அவை குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்ததுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று 8-வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தின் மகர் துவார் நுழைவாயில் படிக்கட்டுகள் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வதேரா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் திமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்று முழக்கம் எழுப்பினர்.
இந்த சிறப்பு திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று கோரி வருகின்றன.