புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஒரு மாத காலம் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, பஹல்காம் தீவிரவாத தாக்குதல், அதை தொடர்ந்து நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், தேசிய விளையாட்டு நிர்வாகம், புதிய வருமான வரி, இந்திய துறைமுகங்கள். வணிக கப்பல் போக்குவரத்து, கோவா புராதன சின்னங்கள் பராமரிப்பு தொடர்பான மசோதாக்கள், தேசிய போதை மருந்துதடுப்பு, வணிகம் செய்வதை எளிதாக்குதல் (ஜன் விஸ்வாஸ்), ஐஐஎம் கல்வி நிறுவனங்கள், மணிப்பூர் ஜிஎஸ்டி, சுரங்கம், கனிமங்கள் தொடர்பான திருத்த மசோதாக்கள் ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. அனைத்து கட்சிகளும் தனித்தனியே ஆலோசனை கூட்டம் நடத்தி, எம்.பி.க்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. இந்த நிலையில், இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் உட்பட 20 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது நாடாளுமன்ற இரு அவைகளிலும் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஒருமித்து செயல்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ள முக்கிய பிரச்சினைகள் விவரம்:
பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஏப்ரல் 22-ம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை யால், பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால், இந்தியா – பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் தீவிர போர் நடைபெற்றது.
இந்த நிகழ்வுகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், சிறப்பு கூட்டம் நடத்தப்படவில்லை. இதற்கிடையே, பஹல்காம் தாக்குதல் நடந்து 3 மாதங்கள் ஆகியும், தீவிரவாதிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அது தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
கார்கில் போர் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தியதுபோல, ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் விரிவான விவாதம் நடத்த வேண்டும். இந்தியா – பாகிஸ்தான் போர் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதுதொடர்பான உண்மை நிலையை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஏர் இந்தியா விமான விபத்து: கடந்த ஜூன் 12-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி 270 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு முதல்கட்ட அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக மேற்கத்திய ஊடகங்களில் எதிர்மறையான செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கூறிவருகின்றன.
வாக்காளர் பட்டியல் திருத்தம்: பிஹார் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இந்த நிலையில் அங்கு வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, திரிணமூல் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதர முக்கிய பிரச்சினைகள்: இவை மட்டுமின்றி, மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகள் கடந்தும் இயல்பு நிலை திரும்பாதது, இந்தியா – சீனா எல்லை பிரச்சினை, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் எரிந்த நிலையில் கட்டுக் கட்டாக பணம் மீட்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடர் அமளி நிறைந்ததாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள்: நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மத்திய அரசு சார்பில் டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில் 51 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமை வகித்தார்.
அவர் பேசும்போது, “மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு உரிய பதில் அளிக்கப்படும்” என்றார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ: பஹல்காம் தீவிரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விதிகளுக்கு உட்பட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க வகை செய்யும் தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது நீதித்துறையின் ஊழல் சார்ந்த விவகாரம். இதில் அரசியல் செய்ய கூடாது. அவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்தாமல் பிரதமர் மோடி தப்பி ஓடினார். இப்போது மழைக்கால கூட்டத் தொடரில் அதுபோல தப்ப முடியாது. பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் இதுவரை கைது செய்யப்படாதது ஏன் என்று பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.