புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள், விமான தளங்கள் அழிக்கப்பட்டன. பின்னர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பலர் வலியுறுத்தினர். ஆனால், சிறப்பு கூட்டம் எதுவும் கூட்டப்படவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ம் தேதி நிறைவடைகிறது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, வக்பு சட்டத் திருத்த மசோதா, நிதி மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன. அத்துடன் பல்வேறு துறை மானியங்களுக்கான விவாதமும் நடைபெற்றது.
இந்நிலையில், வரும் 21-ம் தேதி தொடங்க உள்ள மழைக்கால கூட்டத் தொடரின்போது பல்வேறு முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்யவும், அவற்றை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய மசோதாக்களும், சட்டத் திருத்த மசோதாக்களும் இவற்றில் அடங்கும். வரி விதிப்பு, விளையாட்டு, கல்வி, சுரங்கம், கப்பல் போன்ற துறைகள் தொடர்பாக இந்த மசோதாக்கள் இருக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது எம்.பி.க்களின் வருகைப் பதிவு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, எம்.பி.க்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் தங்களது வருகையை பதிவு செய்யலாம். இதன் மூலம் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எம்.பி.க்கள் வருகை வெளிப்படையாக இருக்கும்.
அத்துடன், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எம்.பி.க்கள் பங்கேற்பதற்கு வழங்கப்படும் அலவன்ஸ் தொகையில் முறைகேடுகள் நடப்பதையும் தடுக்க முடியும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) திருத்த மசோதா, ஜன் விஸ்வாஸ் திருத்த மசோதா, ஐஐஎம் திருத்த மசோதா, வரிவிதிப்பு சட்டத் திருத்த மசோதா, புவி பாரம்பரிய இடங்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மசோதா, சுரங்கம் மற்றும் தாதுக்கள் மேம்பாடு மற்றும் கட்டுப்பாடு திருத்த மசோதா, தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, தேசிய போதை தடுப்பு திருத்த மசோதா, சரக்கு கப்பல் மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா, வருமான வரி மசோதா உட்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி முடிகிறது. இதை நீட்டிப்பதற்கான மசோதாவும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது.