புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட 8 முக்கிய விஷயங்களை விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்திருந்தனர். எனினும், இதனை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து, மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக முதலில் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “பாதுகாப்புத் துறை அமைச்சர் பேச அனுமதிக்கப்படுகிறார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் எவருக்கும் பேச அனுமதி வழங்கப்படுவதில்லை. இது ஒரு புதிய அணுகுமுறையாக உள்ளது. அரசுக்கு ஆதரவாக இருப்பவர்களாக இருந்தால் அவைக்குள் பேச முடியும். எதிர்க்கட்சி எம்பிக்களாக இருந்தால் பேச அனுமதி கிடைக்காது.” என தெரிவித்தார்.
காலையில் நடந்த அமளிக்குப் பிறகு மதியம் 2.30 மணி அளவில் அலுவல் ஆய்வுக் குழு கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது, “விவாதத்துக்கு அரசு தயாராக உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராடிக்கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று இதுபோன்று போராட்டம் நடத்துவது சரியல்ல.” என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இதனை சுட்டிக்காட்டி செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “விவாதத்துக்கு அரசு தயார் என்றால், எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்க வேண்டும். அவர் பேசுவதற்கு எழுந்து நின்றார். அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.” என தெரிவித்தார்.
மக்களவையில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எந்த ஒரு விவகாரம் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என தெரிவித்திருந்தார்.