புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவையில் சமோசா பிரச்சினையை பாஜகவின் எம்பி நடிகர் ரவி கிஷண் (56) எழுப்பியிருந்தார். இதனால், அவர் மீது கடும் விமர்சனங்கள் கிளம்பி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் பாஜகவின் எம்பியான நடிகர் ரவி கிஷண் சமீபத்தில் சமோசா பிரச்சினையை எழுப்பியிருந்தார். சமோசாவின் அளவுகள் குறைந்து, அதன் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் புகார் செய்தார். இதனால், சமோசா பிரச்சினையை தீர்க்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதிலும் ஒரே வகையில் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுவரையும் எந்த எம்பியும் இதுபோல் சமோசா விவகாரத்தை எழுப்பியதில்லை எனத் தெரிகிறது. முதன்முறையாக நாடாளுமன்றத்திலும் முக்கியத்துவம் பெற்ற சமோசா விவகாரத்தில், பாஜக எம்பி மீது சமூகவலைதளங்களில் கடுமையாகவும், கிண்டல் பேசியும் விமர்சனங்கள் வைரலாகி வருகின்றன.
போஜ்புரி நடிகரான ரவி கிஷணின் சமோசா விவகாரத்தில் ஒருவர், ‘சமோசாவைக் குறிப்பிட்டு மக்களவை எம்பிக்கள் முன்பாக கிண்டலடிக்கிறார் என எண்ணினேன். ஆனால், அவர் சமோசாவை போய் மிகவும் முக்கியமானப் பிரச்சினையாக முன்னிறுத்துகிறார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவரது தனது விமர்சனத்தில், ‘எம்பி ரவி கிஷண் நாட்டின் முக்கியப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார். இது சமோசாவின் விலை மற்றும் அளவு குறித்தது. இது, தெருமுனைக் கடை அல்லது ஐந்து நட்சத்திர ஓட்டலாக இருந்தாலும் ஒரே வகையில் கிடைக்க வேண்டும் என விரும்புகிறார். ஆக.. நாட்டின் உண்மையானப் பிரச்சினையை ஒருவழியாக மக்களவையில் ஒரு எம்பி எழுப்பி விட்டது மகிழ்ச்சி அளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
‘மருந்துகளின் விலை வானத்தை தொட்டுவிடும் அளவில் உயர்கிறது. பொருளாதரமும் வீழ்ச்சி அடைகிறது. வேலை இல்லாத் திண்டாட்ட நிலை உயர்கிறது. அரசு சார்பில் கட்டப்படும் பாலங்கள் உடைகின்றன. ஆனால், ரவி கிஷண்ஜிக்கு சமோசா விலையும், அளவும் மட்டுமே பிரச்சினையாக உள்ளது’ என்றும் ஒருவர் விமர்சித்துள்ளார்.
இதுபோன்ற பல விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தொடர்ந்து மூன்று முறை எம்.பி.யான ரவி கிஷண் தனது எக்ஸ் தளத்தில், ‘வாடிக்கையாளர்கள் வாங்கும் சமோசாவின் விலையும், அதன் தரமும் முக்கியம். எண்ணெய் அல்லது நெய் ஊற்றி செய்யப்படும் இந்த சமோசா ருசியாக இருக்கும் ரகசியமும் எனக்கு புரியவில்லை.
மெனு அட்டைகளில் சமோசாவின் விலையுடன் அதன் அளவும் குறிப்பிடுவது அவசியம். 11 வருடங்களாக பல துறைகளில்ச சீர்திருத்தம் செய்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், இந்த உணவு(சமோசா) துறையில் மட்டும் சீர்திருத்தம் செய்யப்படாமல் உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
போஜ்புரி மொழியின் பிரபல நடிகரான ரவி கிஷண், காங்கிரஸில் இணைந்து 2014 மக்களவை தேர்தலில் உ.பி.யின் ஜோன்பூரில் போட்டியிட்டு தோல்வியுற்றார். பிறகு பாஜகவில் இணைந்தவர் 2019 மற்றும் 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று உபி முதல்வர் யோகியின் சொந்த ஊரான கோரக்பூர் தொகுதி எம்பியாக உள்ளார். இவருக்கு சமீபத்தில் சிறந்த எம்பி விருதான சன்சத் ரத்னா வழங்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.