நாக்பூர்: மத்தியபிரதேச மாநிலத்தின் சியோனி மாவட்டம், கரன்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அமித் யாதவ் (35). இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது மனைவி கயார்சி உடன், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்குப் புறப்பட்டார்.
ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நாக்பூரின் லோனாரா அருகில் செல்லும்போது இவர்களின் பைக் மீது ஒரு லாரி உரசியது. இதில் சாலையில் விழுந்த கயார்சி லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்கு பிறகு லாரியை நிறுத்தாமல் டிரைவர் தப்பிச் சென்று விட்டார்.
எதிர்பாராத விபத்தால் செய்வதறியாது தவித்த அமித் அவ்வழியே செல்லும் வாகனங்களிடம் உதவி கோரினார். ஆனால் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இதையடுத்து அவர் தனது மனைவியின் உடலை மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் வைத்து கட்டிக்கொண்டு சொந்த ஊருக்குப் புறப்பட்டார்.
இந்நிலையில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி, கயார்சியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக நாக்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அமித் யாதவை தடுத்து நிறுத்தும் முன் போலீஸார் எடுத்ததாக கூறப்படும் ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அது காண்போரின் மனதை உருக்குவதாக உள்ளது.
விபத்து தொடர்பாக நாக்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். லாரியையும் அதன் டிரைவரையும் கண்டறிய முயன்று வருகின்றனர்.