புதுடெல்லி: நவி மும்பை சர்வதேச விமான நிலையம், 3-ம் கட்ட மும்பை மெட்ரோ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
மகாராஷ்டிராவின் நவி மும்பையில் ரூ.19,650 கோடி செலவில், 1,160 ஹெக்டேர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த விமான நிலையத்தின் முதல்கட்ட திட்டப் பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. இதன்மூலம் ஆண்டுக்கு 2 கோடி பேர் பயணம் மேற்கொள்ள முடியும். மேலும் 4-ம் கட்ட திட்டப் பணிகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட உள்ளன. இவை நிறைவடையும்போது ஆண்டுக்கு 9 கோடி பேர் வரை பயணம் மேற்கொள்ள முடியும். வரும் 2030-ம் ஆண்டில் நவி மும்பை சர்வதேச விமான நிலையம் முழுமையாக செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாம் கட்ட மும்பை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.12,200 கோடியில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி ஆச்சார்யா அத்ரே சவுக் முதல் கபே பரேட் வரை புதிய மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் மும்பை செல்கிறார். அப்போது நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையம் மற்றும் 3-வது கட்ட மும்பை மெட்ரோ ரயில் திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.
இங்கிலாந்து பிரதமருடன் சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். மும்பையில் முகாமிடும் அவர், நாளை காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அன்றைய தினம் காலை இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்து அளிக்கிறார். பிற்பகலில் இரு நாடுகளின் தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பின்னர் மும்பையில் நடைபெறும் பின்டெக் விழாவில் இருவரும் பங்கேற்கின்றனர்.