புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்த சூழலில் அவரை தன் நண்பர் என குறிப்பிட்டு பிரதமர் மோடி நன்றி கூறியுள்ளார்.
கடந்த ஜூன் 17-ம் தேதிக்கு பின்னர் இருநாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேசிக் கொள்வது இதுவே முதல் முறை என தகவல். இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50% வரி விதிப்பு நடவடிக்கை இருநாட்டு உறவில் சற்று விரிசலை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்ற காரணத்தால் கூடுதலாக 25% வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இந்த நிலையில்தான் பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
“தொலைபேசி அழைப்பில் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய என் நண்பர், அதிபர் ட்ரம்ப்புக்கு நன்றி. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உலகளாவிய கூட்டாண்மையை புதிய உயரத்துக்கு இட்டுச் செல்வதில் தங்களை போலவே நானும் உறுதியாக உள்ளேன். உக்ரைனில் அமைதியான தீர்வு காண நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்” என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.