அமராவதி/ஹைதராபாத்: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிந்த பின்னர், நதிநீர் பங்கீடு, அரசு ஊழியர்கள் பங்கீடு, நிதி நிலை பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் 10 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் தீர்வு காணப்படாமலேயே உள்ளது.
இதுகுறித்து நேற்று டெல்லியில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சிஆர். பாட்டீல் முன்னிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இரு மாநில நீர் வளத்துறை அமைச்சர்கள், இரு மாநிலத்தின் தலைமை செயலாளர்கள் மற்றும் இரு மாநில உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், ஆந்திர அரசு தரப்பில், ஜனகசர்லா – போலாவரம் லிங்க் அணை கட்டுவது குறித்து மட்டுமே பேசுவதாக குறிப்பிடப்பட்டது. ஆனால், தெலங்கானா அரசு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு, சைலம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது, பாலமூரு-ரங்காரெட்டி, திண்டி, சம்மக்கா சாகர், பிராணஹிதா-சேவள்ளு அணை விவகாரம் உள்ளிட்ட 13 அம்சங்களை பட்டியலில் சேர்த்திருந்தது. மொத்தம் 14 அம்சங்கள் குறித்து நேற்று இரு மாநில முதல்வர்களும், அமைச்சர்களும், அதிகாரிகளும் சுமார் ஒரு மணி நேரம் வரை விவாதித்தனர்.
கோதாவரி – ஜனகசர்லா லிங்க் திட்டம் குறித்து ஆந்திரா தரப்பில் மத்திய நீர் வளத்துறையிடம் அறிக்கையும் வழங்கப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: கடலில் கலக்கும் நீரை உபயோகப்படுத்த இது அருமையான திட்டம். இதனால், ஆண்டுக்கு 200 டிஎம்சி நீர் பாசனத்திற்கும், குடி நீர் திட்டங்களுக்கும் பயன்படுத்தலாம். இதனால் இருமாநிலங்களுக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை.
கடந்த 11 ஆண்டுகளாக ஆந்திராவின் மேல் பகுதியில் இருக்கும் தெலங்கானா மாநிலம் கட்டிய எந்தவொரு அணை கட்டும் திட்டத்திற்கும் ஆந்திர அரசு முட்டுக்கட்டை போடவில்லை. ஆதாலால் தெலங்கானாவின் கீழே உள்ள ஆந்திர மாநில மக்களின் நீராதாரத்தை நினைவில் கொண்டு மத்திய நீர்வளத்துறை முடிவெடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நட்பு ரீதியான பேச்சுவார்த்தை: பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சர் நிம்மல ராமாநாயுடு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நதிநீர் பங்கீடு குறித்து இரு மாநில முதல்வர்களும் நட்பு ரீதியாகவே பேசினர். கிருஷ்ணா, கோதாவரி நதி நீரை இரு மாநிலங்களுக்கும் உபயோகிக்கும் முறை, வரையறை குறித்து விவாதிக்கப்பட்டது” என்றார்.