குப்பம்: நதிநீர் இணைப்பு திட்டம் மிகவும் அவசியம். இதனை தெலங்கானா அரசியல்வாதிகள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சித்தூர் மாவட்டத்தில் பயணம் செய்தார். அவர் தனது குப்பம் தொகுதியில் ஹந்திரி – நீவா குடிநீர் திட்ட கால்வாய் மூலம் ஸ்ரீசைலம் பகுதி யில் இருந்து வந்த கிருஷ்ணா நதி நீருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கிருஷ்ணா நதி நீரை 738 கி.மீ. தூரத்தில் இருந்து எனது தொகுதி மக்களுக்காக கொண்டு வந்துள்ளேன்.
இதன்மூலம் குப்பம் தொகுதியில் உள்ள 66 ஏரிகள் நிரம்பும். 3,200 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் பிரச்சினை தீரும். ராயலசீமாவில் தண்ணீர் திட்டங்களுக்காக ரூ.12,500 கோடி செலவு செய்துள்ளோம்.
ஆனால் கடந்த ஜெகன் ஆட்சியில் வெறும் ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்து, கிருஷ்ணா நதி நீரை குப்பம் கொண்டு வந்ததாக நாடகம் ஆடினர். ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு ஏரிக்கும் தண்ணீர் கொண்டு வருவது எனது கடமை. அடுத்த கட்டமாக சித்தூருக்கு தண்ணீர் வழங்கப்படும்.
போலவரம், ஜனகசர்லா அணைகளின் பணிகள் நிறைவடைந்து, வம்சதாராவில் இருந்து பென்னா நதியை இணைத்தால் ஆந்திராவுக்கு தண்ணீர் பிரச்சனை என்பதே எப்போதும் இருக்காது. நதிகள் இணைப்பு திட்டம் என்பது மிகவும் முக்கியமானது. இதனை தெலங்கானா அரசியல்வாதிகள் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் மூலம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. விரைவில் ஆட்டோ ஓட் டுநர்களின் நலனுக்காக புதிய திட்டம் அறிவிக்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.