புதுடெல்லி: நாட்டில் தற்போது அரசியல் விவாதங்கள் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும், வன்முறையாகவும் மாறிவிட்டது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கவலை தெரிவித்துள்ளார்.
பிஹாரில் நடந்த இண்டியா கூட்டணியின் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறப்பட்டது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இது குறித்து மாயாவதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக தேர்தல்களின்போது, நாட்டில் அரசியல் பேச்சு நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும், வன்முறையாகவும் மாறிவிட்டது.
அரசியல் சுயநலத்துக்காகவே கட்சிகள் செயல்படுகின்றன. இதனால் நாட்டில் அரசியலின் நிலை வீழ்ச்சியடைந்து வருவது மிகவும் வருத்தமாகவும் கவலையாகவும் இருக்கிறது. தேசத்தின் நலனுக்காகவும், கோடிக்கணக்கான ஏழை மற்றும் சாதாரண மக்களின் நலனுக்காகவும கட்சிகள் தங்கள் கொள்கைகளின்படி செயல்பட வேண்டும். அரசு, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அரசியலில் உயர் பதவிகளை வகிப்பவர்கள் குறித்து பகிரங்கமாக வெளியிடப்படும் இழிவான, அநாகரிகமான கருத்துகள் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்.
இந்தச் சூழலில், பிஹாரில் சமீபத்தில் கேள்விப்பட்டவை மிகவும் கவலைக்குரியவை அனைவரின் நலனும், மகிழ்ச்சியுமே முதன்மை என்ற அம்பேத்கரிய சித்தாந்தத்தைப் பின்பற்றும் பகுஜன் சமாஜ் கட்சி, எப்போதும் நச்சு அரசியலுக்கு எதிரானது. ஒருவரையொருவர் வலுக்கட்டாயமாகத் தாழ்த்திக்கொள்ளும் மலிவான அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.