லக்னோ: நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நக்சலைட்கள் கண்காணிப்பு பணிக்காக ட்ரோன்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.
இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தியதில் உத்தர பிரதேசம் மதுராவைச் சேர்ந்த விஷால் சிங் என்பவர் நக்சலைட்களுக்கு ட்ரோன்களை விநியோகம் செய்தது கண்டறியப்பட்டது. அவர் கடந்த மாதம் 29-ம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் அவ்வப்போது அறிமுகமாகும் நவீன ட்ரோன்களை பிஹாரின் சக்கர்பந்தா -பச்ருகியா வனப்பகுதியில் உள்ள நக்சல் தலைவர்களுக்கு விநியோகித்தது தெரியவந்தது. அதோடு வனப்பகுதியில் உள்ள நக்சலைட் முகாம்களுக்கே சென்று நக்சலைட்களுக்கு ட்ரோன்களை இயக்குவதற்கான பயிற்சியையும் இவர் அளித்துள்ளார்.
மேலும் நக்சல் வேட்டையில் ஹார்டு டிஸ்க், பென் டிரைவ், செல்போன்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. நக்சலைட்களின் திட்டங்களை அறிய இந்த டிஜிட்டல் பொருட்களை எல்லாம் என்ஐஏ ஆய்வு செய்து வருகிறது.