மும்பை: ரூ.60 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் நடிகர் ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. மகாராஷ்டிர மாநிலத்தில் குடியேறி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
அவர், தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் மகாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும், தன்னிடம் பெற்ற ரூ.60 கோடியை தராமல் மோசடி செய்ததாக மும்பை போலீஸில் தொழிலதிபர் தீபக் கோத்தாரி(60) என்பவர் புகாரளித்தார்.
அந்த புகாரில் அவர் கூறியுள்ளதாவது: 2015-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை பெஸ்ட் டீல் ‘டிவி’ என்னும் நிறுவனத்துக்கு ரூ.60 கோடியை கடனாக வாங்கி விட்டு, பின்னர் அந்த நிறுவனம் திவாலாகி விட்டதாக நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஆனால், என்னிடம் வாங்கிய ரூ.60 கோடியை, வேறு நிறுவனங்களில் ஷில்பா – ராஜ் தம்பதியினர் முதலீடு செய்துள்ளனர். வணிக விரிவாக்கம் என்ற போலிக்காரணத்தைக் கூறி இந்த நிதியை வாங்கியுள்ளனர்.
ஆனால், உண்மையில் தங்களது தனிப்பட்ட செலவுகளுக்கு இந்த நிதியை பயன்படுத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.60 கோடியைப் பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, ஷில்பா ஷெட்டி, அவர் கணவர் ராஜ் குந்த்ரா மீது, மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, நடிகை ஷில்பா ஷெட்டி, அவர் கணவர் ராஜ் குந்த்ரா இருவரும் வெளிநாட்டுக்குச் தப்பி சென்று விடாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸை மும்பை போலீஸார் பிறப்பித்துள்ளனர். இருவரும் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதால், வழக்கின் விசாரணையை சுமூகமாக நடத்துவதற்கு உதவியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், தங்கள் மீது கொடுக்கப்பட்ட புகார் அடிப்படை ஆதார மற்றது என்றும், தங்களது புகழைக் கெடுக்க செய்யப்பட்ட சதி என்றும் நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

