புதுடெல்லி: லோட்டஸ் கேப்பிட்டல் பைனான்ஸ் சர்வீசஸ் (வங்கி சாரா நிதி நிறுவனம்) நிறுவனத்தின் இயக்குநர் தீபக் கோத்தாரி (60). ஜூஹுவைச் சேர்ந்த தொழிலதிபரான இவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது:
நடிகை ஷில்பா ஷெட்டி கடன் பெற விரும்புவதாக எனது நிறுவனத்தில் கடன் முகவராக பணிபுரிந்த ராஜேஷ் ஆர்யா தெரிவித்தார். அதன் அடிப்படையில் நடிகை ஷில்பாவையும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவையும் ஜூஹுவில் சந்தித்துப் பேசினேன். அப்போது அவர்கள், தங்களிடம் ஆன்லைன் விற்பனை தளமான பெஸ்ட் டீல் டிவி நிறுவனம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட ஏராளமான சொத்துகள் இருப்பதாக கூறினார்.
இதன் அடிப்படையில் அவர்களுக்கு ரூ.60.48 கோடி கடன் கொடுத்தேன். இந்நிலையில் 2017-ல் அந்த நிறுவனத்துக்கு எதிராக திவால் நடவடிக்கை தொடங்கப்பட்டது. எனது பணத்தை பலமுறை கேட்டும் அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. எனவே கொடுத்த பணத்தை மீட்டுத் தரவேண்டும். இவ்வாறு தீபக் கோத்தாரி அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மும்பை போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகை என்பதால் இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது.