சூரத்: குஜராத் மாநிலம், சூரத் நகரில் வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நகரின் கபோத்ரா பகுதியில் தேவேந்திர சவுத்ரி என்பவர் வைரங்களுக்கு பட்டை தீட்டும் தொழிற்கூடம் நடத்தி வருகிறார். கடந்த திங்கட்கிழமை இவரது தொழிற்கூடத்தில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு, பக்கத்து கடைக்காரர் அவருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து தேவேந்திர சவுத்ரி விரைந்து வந்து பார்த்ததில் தொழிற்கூடத்தில் இருந்த இரும்பு பெட்டகம், காஸ் கட்டர் மூலம் வெட்டி எடுக்கப்பட்டு அதில் இருந்த வைர கற்கள் கொள்ளைபோனது தெரியவந்தது.
இரும்பு பெட்டகத்தில் ரூ.32.48 கோடி மதிப்பிலான பட்டை தீட்டப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்படாத வைர கற்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த 15-ம் தேதி பிற்பகலுக்கு பிறகு கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வாராந்திர விடுமுறை காரணமாக தொழிற்கூடம் மூடப்பட்டிருந்து.
இந்நிலையில் தொடர் விடுமுறையை பயன்படுத்தி கொள்ளையர்கள் வைர கற்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் தொழிற்கூடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா சாதனங்களையும் அவர்கள் கழற்றிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக சூரத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.