திருமலை: திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான மருத்துவமனைகளில் சேவை புரிய பக்தர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் பி.ஆர். நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தான மருத்துவமனைகளில் சேவை செய்ய விரும்பும் பக்தர்களுக்கு ‘ஸ்ரீவாரி சேவா டிரைனர்’ எனும் பெயரில் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த சேவையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். பயிற்சி அளிக்க சிலர் நியமனம் செய்யப்படுவர். அதன் பின்னர் பயிற்சி பெற்ற சேவகர்கள், திருப்பதியில் உள்ள சிம்ஸ், பேர்ட் எனும் தேவஸ்தான மருத்துவமனையில் சேவை புரிய அனுமதிக்கப்படுவர். வெளிநாடு வாழ் இந்திய பக்தர்களும் இந்த சேவையில் ஈடுபடுத்தப்படுவர்.
கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருமலையில் ஓட்டல்களை நடத்த டெண்டர் எடுத்தவர்கள் பக்தர்களுக்கு தரமில்லா உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றதாக புகார் எழுந்தது. எனவே, இம்முறை மக்களுக்கு நன்கு அறிமுகமான தரமான ஓட்டல்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அடையார் ஆனந்த பவன் உள்ளிட்ட பிரபல ஓட்டல்களுக்கு திருமலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் தரமான மற்றும் ருசிகரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.