பாட்னா: பிஹாரில் வீடுகளுக்கு 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் முதல்வர் நிதிஷ் குமார் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிஹாரில் மின்சார கட்டணம் ஏற்கெனவே குறைவாக உள்ளது.
இந்நிலையில், வீடுகளுக்கு மாதத்துக்கு 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். இது வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். அதாவது ஜூலை மாதத்துக்கான பில்லில் 125 யூனிட் வரை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இதன்மூலம் 1.67 கோடி குடும்பத்தினர் பயனடைவார்கள்.
மாநிலத்தில் சூரிய மின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும். குறிப்பாக, அடுத்த 3 ஆண்டுகளில் சூரிய சக்தி உட்பட மாற்று ஆதாரங்கள் மூலம் 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு மாதத்துக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.