புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர இண்டியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அங்கு வாக்கு திருட்டு நடைபெறுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையமும், பாஜகவும் இணைந்து செயல்படுவதாகவும் கூறியிருந்தார்.
இதற்கிடையே, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ‘‘வாக்கு திருட்டு நடைபெறுவதாக கூறியிருப்பதன் மூலம் அரசியல் சட்டத்தை ராகுல் காந்தி அவமதிக்கிறார்’’ என்று தெரிவித்தார். மேலும், தேர்தல் ஆணையம் மீதான புகார் குறித்து ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். 7 நாட்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால், அவரது குற்றச்சாட்டுகள் பொய்யானவை ஆகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவருவது குறித்து இண்டியா கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீர்மானம் வெற்றி பெற வேண்டுமானால், நாடாளுமன்ற இரு அவைகளிலும் உள்ள உறுப்பினர்களில் 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், அந்த அளவுக்கு உறுப்பினர்கள் பலம் இண்டியா கூட்டணிக்கு இல்லை. எனினும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக எதிர்க்கட்சியினர் இதுபோன்ற செயலில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.