பாட்னா: தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குகிறது என்பதில் சந்தேகமில்லை என குற்றம்சாட்டியுள்ள ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் நிதிஷ் குமாரை நீக்குவதற்கு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உள்ளவர்களே போதுமானவர்கள் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய பிரசாந்த் கிஷோர், “தேஜஸ்வி யாதவ் பேசுவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உள்ளவர்களே, பாஜக மற்றும் நிதிஷ் குமாரை நீக்க போதுமானவர்கள். எத்தனை பெயர்களை அவர்கள் நீக்குவார்கள்?.
பிஹார் மக்கள் வேலைவாய்ப்பு வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர், வெற்றுப் பேச்சுகளை அல்ல. பிஹாரில் யாரும் பொய்யான வாக்குறுதிகளுக்கு ஏமாறப் போவதில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தை எதிர்த்துப் போராடுவார்கள். தேர்தல் ஆணையம் எஜமானர் அல்ல, மக்களே எஜமானர்கள். மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.” என்று கூறினார்.
மேலும், “ராகுல் காந்தியும் தேஜஸ்வி யாதவும் பாதயாத்திரை மேற்கொண்டாலும், ஹெலிகாப்டர் பயணத்தை மேற்கொண்டாலும், பிஹார் மக்கள் பல ஆண்டுகளாக அவர்களைப் பார்த்து வருகின்றனர். ராகுல் காந்தி பிஹாரில் ஒரு நாள் கூட தங்கியதில்லை.
இவர்கள் டெல்லியில் பிஹார் மக்களை கேலி செய்கிறார்கள். மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானாவில் பிஹார் மக்கள் தாக்கப்படும்போது ராகுல் காந்தி அலட்சியமாக இருப்பார். இப்போது அவர்களுக்கு வாக்குகள் தேவை என்பதால், பிஹாருக்கு வருகிறார்கள். ஆனால் பிஹார் மக்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்டுள்ளார்கள்.” என்று அவர் கூறினார்.